ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார் ஹேமந்த் சோரன்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானாவை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. மகாாஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்த போதிலும், ஜார்க்கண்டில் படுதோல்வி அடைந்துள்ளது.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியேற்பு விழா:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 34 இடங்களிலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதை தவிர, இந்த கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி மொத்தமாக 56 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வாரை இன்று சந்தித்துள்ளார்.
பாஜகவுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் முடிவுகள்:
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஹேமந்த் சோரனை இந்தாண்டின் தொடக்கத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது. அதற்கு சரியான பதிலடியாக, தன்னுடைய கணவரை மீண்டும் முதலமைச்சர் அரியணையில் ஏற்றி இருக்கிறார் கல்பனா சோரன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஹேமந்த் சோரனின் மனைவிதான் கல்பனா சோரன்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வெற்றியில் கல்பனா சோரன் முக்கிய பங்காற்றி இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 200 தேர்தல் பேரணிகளை நடத்தி, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார் கல்பனா சோரன்.
கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசியலில் நுழைந்த கல்பனா, மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஹேமந்துடன் இணைந்து முக்கியப் பங்காற்றினார்.
இதையும் படிக்க: தகாத முறையில் நடந்துகொண்ட நபர்..மாஸ் காட்டிய மணிரத்னம்...சுஹாசினி பகிர்ந்த ஷாக் தகவல்