திருமாவளவன் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது எனவும் அதை சொல்வதில் தவறு இல்லை எனவும் விசிகவின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “திருமாவளவன் தேர்தல் அரசியலில் 25ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அரசியல் பாதையில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கட்சியை நிறுவி அதனை இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக்கி காட்டியிருக்கிறார். அத்தகைய ஆளுமைமிக்க தலைவர் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை பயக்கும். அப்படி சொல்வதில் எந்தவொரு தவறும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் களமாடி வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றட்தேர்தலில் தமாகாவுடன் கூட்டணி அமைத்து முதன் முதலாக தேர்தலில் களமிறங்கியது விசிக. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமா அமோக வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
2001 சட்டமன்ற தேர்தலில் முதன்முதலில் திமுகவுடன் கூட்டணி வைத்தது விசிக. மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அப்போதே திமுகவுடன் முரண்பாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோதும் தனி சின்னத்தில்தான் விசிக போட்டியிட்டது.
2011, 2014 தேர்தல்களில் திமுக கூட்டணியிஒல் படுதோல்வியை சந்தித்தது விசிக. 2016ஆம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணியும் விசிகவுக்கு கை கொடுக்கவில்லை. இப்படி தொடர்ந்து சறுக்கி வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல் விசிகவை ஃபார்முக்கு கொண்டுவந்தது. அப்போது தனி சின்னத்தில் திருமாவளவனும் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதையடுத்து 2021 தேர்தலில் திமுகவுடன் பல முரண்பாடுகள் இருந்தாலும் பாசிச கட்சிகளின் வெற்றிக்கு இடம் கொடுக்க கூடாது என எண்ணிய திருமா வெறும் 6 சீட்டுகளுக்கு திமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதில் வெற்றியும் பெற்றார். இதையடுத்து 25 ஆண்டுகால ஏக்கத்திற்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தது 2024ஆம் ஆண்டு தேர்தல். வெறும் இரண்டு தொகுதிகள் கிடைத்தாலும் அதில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் திருமாவளவன்.
இந்நிலையில் தான் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன் திருமா தனது அரசியல் கட்சியை வழிநடத்தி வருகிறார்.