ஜார்க்கண்ட மாநில அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிக்கியதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தபோதிலும், முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்பதில் தொடர் இழுபறி நீடித்தது. 


ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு:


பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுக்கவில்லை என ஆளும் தரப்பு குற்றம் சுமத்தியது. பெரும் சர்ச்சையை தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.


இந்த நிலையில், ஜார்க்கண்ட சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து வருகிறது. நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஆளுநர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.


தனது கைதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. "ஜனவரி 31ஆம் தேதி இரவு, நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தில் ராஜ்பவனுக்கும் (ஆளுநர் மாளிகை) தொடர்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.


ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை தெறிக்கவிட்ட ஹேமந்த் சோரன்:


இந்த நாள் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும். ஜார்கண்டில் ஆளும் கூட்டணிக்கும் சாம்பாய் சோரனுக்கு முழு ஆதரவு உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன். 8.3 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர், நான் என்பதற்கான பதிவேடுகளைக் காட்டினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன். 


உங்களுக்கு (பாஜக) தைரியம் இருந்தால் அதை நிரூபியுங்கள். நாங்கள் இன்னும் தோல்வியை ஏற்கவில்லை. என்னை சிறையில் அடைத்து வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தங்கள் உரிமைகளுக்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்த மாநிலம் ஜார்கண்ட்.
 
நான் கண்ணீர் விடமாட்டேன். ஆனால், நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன். அரசியலில் இருந்து விலகுவதை விடுங்கள், 8 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர், நான் என்பதற்கான பதிவேடுகளுடன் சட்டப்பேரவைக்கு பாஜக வந்தால் நான் ஜார்கண்டிலிருந்து வெளியேறுவேன். 


அவர்கள் எனது உறுப்பினர் பதவியை பறித்து கொண்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், அரசியல் ரீதியாகவோ, சட்டரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அவர்களுக்கு நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


ஜார்க்கண்டில் பழங்குடியின முதலமைச்சர் ஒருவர் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தவை பாஜக விரும்பவில்லை. அவர்கள் ஆட்சியில் இதை அனுமதிக்க மறுக்கின்றனர்" என்றார்.