Election Campaign: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களுக்கு உத்தரவு:
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலின்போது குழந்தைகளை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு சீட்டுகள் விநியோகித்தல், முழக்கங்கள் எழுப்புதல், பரப்புரையில் ஈடுபடுத்தல் ஆகியவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது. அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் ஏந்துவது, வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை:
கவிதை, பாடல்கள், பேச்சு வார்த்தைகள், அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. அதேசமயம், பெற்றோருடன் குழந்தைகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பது விதிமீறல் அல்ல. இந்த உத்தரவுகளை மீறி தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் என்பதால் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2016ல் திருத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986ஐ கடைபிடிக்க வேண்டிய கடமையை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நினைவூட்டியது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
மக்களவைத் தேர்தல்: தொகுதி உடன்பாடு ஃபார்முலாவுடன் தே.மு.தி.க. தயார்! யாருடன் கூட்டணி?