உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், இன்று முதல் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


அயோத்தி கோயிலில் முதல் நாளே சம்பவம்:


இந்த நிலையில், முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், பலருக்கு காயம் ஏற்பட்டு கோயிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. உள்ளூரில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று இரவு முதலே கோயிலுக்கு செல்வதற்காக அதன் வாசல்களிலேயே காத்து கிடந்தனர்.


ராமர் கோயிலுக்கு செல்லும் பாதையில் இரண்டு கிமீட்டர் தூரம் வரை வரிசையில் பக்தர்கள் நிற்பதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு உள்ளே முதலில் குழு குழுவாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கூட்டம் அதிகரித்ததால், அதை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்புப் பணியாளர்கள் கோயில் கதவுகளை சிறிது நேரம் மூட வேண்டியிருந்தது.


பக்தர்கள் வருகையால் திணறும் காவல்துறை:


ராமர் கோயிலுக்கு செல்வதற்காக குஜராத்தில் இருந்து வந்த பெண் பக்தர் ஜெய்ஸ்னவி, இதுகுறித்து கூறுகையில், "கூட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் பக்தர்கள். ஆம், சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அது பக்தியை பிரதிபலிக்கிறது. இல்லையா? அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் இவ்வளவு பெரிய வாசஸ்தலத்தில் இளைப்பாறுவதைக் காண வேண்டும் என்ற ஆசையினால் தான் ராமர் கோவில் நிஜமாகியது" என்றார்.


இதுகுறித்து காவல்துறை ஐஜி பிரவீன் குமார் (அயோத்தி) கூறுகையில், "எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், பீதி ஏற்படாமல் இருக்க மக்கள் தங்கள் முறை வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்றார்.


பாரபங்கி போன்ற அண்டை மாவட்டங்களின் போலீசார், ராமர் கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அயோத்தி நோக்கிச் செல்லும் பக்தர்களின் வருகையை ஒழுங்குபடுத்துவதற்காக மாற்றுப்பாதைகளை அமைத்து வருகின்றனர்.


அயோத்தியில் இன்று 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமர் சிலையை தரிசனம் செய்தனுள்ளனர். இதேபோன்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலையில், பக்தர்களுக்கு தொடர்ந்து தரிசனம் வழங்க உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.


ராமரை தரிசனம் செய்வதற்காக கோயிலில் இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதாக கூறப்படுகிறது. கோயில் வளாகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளனர். பக்தர்களின் தரிசனத்தை உறுதி செய்வதற்காக 8000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


உத்தர பிரதேச முதன்மைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் சஞ்சய் பிரசாத், சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜி பிரசாந்த் குமார் ஆகியோர் ராமர் கோயிலுக்குள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.