2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரையை தொடங்கியுள்ளார். “பாரத ஒற்றுமை யாத்திரை”  என முதல்கட்ட யாத்திரைக்கு பெயரிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயணத்துக்கு  “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ளது. 


தர்ணா:


கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் பிரச்சினை மேல் பிரச்சினை வெடித்து வருகிறது.தற்போது அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நேற்று நகோன் நகரில் உள்ள துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் வழிபாடு நடத்த சென்றார். ஆனால் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த கோயிலில் வழிபாடு நடத்த ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மதியம் 3 மணிக்கு மேல் வரும்படி காவல்துறை அறிவுறுத்தியது. 






ஆனால் அவர்களுடன் வாக்குவாதம் செய்த ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனிடையே இன்றைய தினம் அசாமில் உள்ள கவுகாத்தி வழியாக செல்ல முயன்றபோது ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். 


வாக்குவாதம்:


கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் என்பதால்   நகரின் பிரதான சாலைகள் வழியாக செல்லாமல் பைபாஸ் வழியாக செல்லுமாறு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னதாக தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் யாத்திரையை முடக்க மாநில பாஜக அரசு திட்டமிடுவதாக மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். இன்று காலை கவுகாத்தி நகருக்குள் செல்லும் முக்கிய பாதையான கானாபரா பகுதியில் போலீசார் தடுப்புகளால் வைத்து தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.