41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைநகர் டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ஒட்டுமொத்த டெல்லியும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, சுகாதார பணியாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஞாயிறு விடுமுறை கூட ரத்து செய்யப்பட்டது.
மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. நடப்பு மழைப்பருவத்தில் முதலாவது மிக பலத்த மழை இது பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் ஒட்டுமொத்த டெல்லி மாநகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள், தாழ்வன பகுதிகள் என திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கும் வெள்ள நீரில்தான் நடந்து செல்கின்றனர். வெளுத்து வாங்கும் மழையால் பலர் தங்களது வீட்டை இழந்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வீடு இடிந்துவிட்டது எனவும், தங்களை மீட்க விரைவாக வாருங்கள் என கண்ணீருடன் டெல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை சுமார் 20 வீடுகள் இடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணியில் மும்முரமாக செயல்பட்டு வரும் தீயணைப்புத்துறை ஜாகிரா என்ற இடத்தில், ஒரு தகர கூடாரம் இடிந்து விழுந்ததில் சிக்கி தவித்த 2 பேரை பத்திரமாக மீட்டுள்ளது.
மழை அளவு - மஞ்சள் எச்சரிக்கை
நேற்று முந்தினம் முதல் நேற்று அதாவது ஜூலை 9ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகி உள்ளது. இது கடந்த 41 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 169 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், 1958-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி பெய்த 266 மி.மீ. மழைதான் டெல்லியில் பதிவான அதிகபட்ச மழை ஆகும்.
அதன்பிறகு நேற்று பதிவான மழை அளவு, ஜூலை மாதங்களில் பதிவான 3-வது அதிகபட்ச மழை அளவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் இன்றுவரை மழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்துக்கு மட்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.