Delhi Rain: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் அதிகாலை முதல், இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
டெல்லியில் கனமழை:
வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் எல்லையை சார்ந்துள்ள நகரங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கத்திலிருந்து சற்றே சில்லென்ற சூழல் ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபாடும் கணிசமாக குறைந்துள்ளது. இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை ஆனாத் காலை 8.30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. நகரத்தின் மீது ஒரு தீவிர மேகக்கூட்டம் கடந்து சென்றதால் புயல் நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை சீராகும் வரை குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், வெளியே செல்வதைத் தவிர்க்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
3 சிறுவர்கள் உயிரிழப்பு:
டெல்லியின் ஜாபர்பூர் காலா பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், டெல்லியின் சாவாலாவில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சூறைக்காற்றும்.. போக்குவரத்து பாதிப்பும்:
காலை 5.30 மணி முதல் 5.50 மணி வரை, பிரகதி மைதானத்தில் அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் காற்று வீசியது. தலைநகரின் பிற பகுதிகளான இக்னோவில் மணிக்கு 52 கிமீ வேகத்திலும், நஜாப்கரில் மணிக்கு 56 கிமீ வேகத்திலும், லோதி சாலை மற்றும் பிதாம்பூராவில் மணிக்கு 59 கிமீ வேகத்திலும் காற்று வீசியது. திடீரென பெய்த மழையால் லஜ்பத் நகர், ஆர்.கே.புரம், துவாரகா, மோதி பாக், சவுத் எக்டென்சன் ரிங் ரோட் மற்றும் கான்பூர் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே மரங்கள் மற்றும் கம்பங்கள் சரிந்து விழுந்ததால், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் சேதமடைந்தன. டெல்லியின் எல்லைய ஒட்டியுள்ள ஹரியானாவிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சில வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்றதால், அதனை உரிமையாளர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் இறங்கி தள்ளி வெளியே கொண்டு வந்தனர்.
விமான சேவை பாதிப்பு:
கனமழை மற்றும் சூறைக்காற்றால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன, கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதமாகின. விமானங்கள் வந்தடைவதற்கு சராசரியாக 46 நிமிடங்களும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட 54 நிமிடங்களும் சராசரியாக தாமதமாகின்றன. இதன் காரணமாக ஒட்டுமொத்த விமான சேவையில் அட்டவணையும் பாதிக்க வாய்ப்புள்ளதகாவும், டெல்லி விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை தொடர்பான உடனடி தகவல்களை அறிய, குறிப்பிட்ட விமான நிறுவனங்களின் இணைய பக்கத்தை அணுக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விமான நிலைய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.