கொரோனா வைரஸின் உருமாறிய BF.7 ரக தொற்று பரவல் உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனை தயார்நிலையில் வைத்துக்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.


ஆக்ஸிஜன் கையிருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தொற்று பரவல் அதிகரித்து  வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிக்கலாம் என்றும், அதற்கான எற்பாடுகளை செய்யுமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளில் ஏற்படுத்திய பேரழிவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் வேகமெடுக்க தொடங்கியதால் கிட்டதட்ட 6 மாதங்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டது.


இதன்பின்னர் கொரோனா 2ஆம் அலை கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கி கிட்டதட்ட ஆகஸ்ட் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஏராளமான பொருளாதார இழப்பும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டது. தற்போது தான் மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.


 புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மாநில அரசுகளை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். 


அதில் , 



  • மாவட்ட வாரியாக ஃப்ளூ போன்ற கடுமையான சுவாச நோய் வழக்குகளை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுவதை உறுதிசெய்ய வேண்டும்.  அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவு கொரோனா பரிசோதனையை உறுதிசெய்ய வேண்டும்.

  • பொதுமக்கள் கூடும் இடங்களில்   முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். 

  • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


அனைத்து விமான நிலையங்களிலும் இதனை கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


சீனா, ஜப்பான், ஹாங் காங், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம். தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அவர்களை தனிமைப்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


ராண்டம் சோதனைக்குப் பிறகு, பயணிகளின் தொடர்பு விவரங்களை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் (APHOக்கள்), விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். APHO களுக்கு முறையாக பில்களை சமர்ப்பித்தால், பரிசோதனைக்கான செலவு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் திருப்பியளிக்கப்படும். சோதனை செய்யப்படும் பயணிகளின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகள் நியமிக்கப்பட்ட INSACOG ஆய்வகத்தில் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தகவல் தொடர்பு தெரிவித்துள்ளது.