புதிய வகை ஓமிக்ரான் வைரசால் உலக நாடுகள் மீண்டும் கொரோனா அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்திய அரசாங்கமும் தற்போது இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக, விமான நிலையங்களிலும், வெளிநாட்டு பயணிகளுக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா, இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
கொரோனா வைரசால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ் என்று அதன் தாக்கத்தினாலும், அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காலும் இந்திய மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஓமிக்ரான் வைரசின் அச்சுறுத்தலுக்கு உலக நாடுகள் ஆளாகியுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் பாதிக்கும் தன்மை கொண்ட இந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இஸ்ரேல், ஹாங்காங், போஸ்ட்வானா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்க நாடுகளின் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருக்கிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்