* நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பதற்றத்தில் அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவர் தனுஷின் தற்கொலை அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


* தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று அதுதொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.


* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. 22ஆம் தேதி முடிவடைகிறது.


* தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,580இல் இருந்து 1,591 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் தொற்று பாதிப்பு 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 212 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது.


* மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளராக டாக்டர் கனிமொழி, ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


* திமுக முப்பெரும் விழா சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. மாவட்டங்களில் காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


* சென்னையில் 10ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கும், டீசல் ரூ.93.26க்கும் விற்பனை செயயப்படுகிறது.


* தமிழ்நாட்டில் சிறப்பு பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது. அரசுப்பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர், ராணுவ வீரரின் வாரிசுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி என கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். அக்டோபர் 6,9 நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று, நாளை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் கூறியுள்ளார்.


* பா.ஜ.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச் சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


* இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


* ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் டெய்லர்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியே பிரண்டன் டெய்லரின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது.