எந்த ஒரு தந்தைக்கும் மகள் பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலருக்கு அது மிக எளிதாகக் கிடைக்கிறது. ஒரு சிலரோ தவமாக தவம் இருந்து, பெண் பிள்ளை பெற்று எடுக்கின்றனர். அப்படி பல ஆண்டுகளாக தவம் இருந்து தாங்கள் ஆசைப்பட்டது போல் பெண் பிள்ளைகள் பிறந்து விட்டால், தந்தை அவற்றை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். 

 

இதே போன்ற ஒரு சம்பவம் தான், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த நபர் அஞ்சல் குப்தா (28). இவர் தள்ளு வண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அஞ்சல் குப்தா, போபாலில் உள்ள கோலார் பகுதியில் தற்காலிகமாக மூன்று பானி பூரி கடைகளை அமைத்தார். இதனையடுத்து அங்கு வரும் மக்களுக்கு இலவசமாக பானி பூரி வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அஞ்சல் குப்தா. 

இந்த தகவல் காட்டுத் தீ போல் அந்த பகுதி முழுவதும் பரவியதில் இருந்து, அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் திரண்டனர். சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானி பூரிகளை, அஞ்சல் குப்தா இலவசமாக வழங்கி அசத்தி இருக்கிறார். 

இதுகுறித்து பானி பூரி வியாபாரி அஞ்சல் குப்தா கூறுகையில், “பிறப்பில் ஆண் குழந்தை, பெண்
  குழந்தை என்ற பேதம் பார்க்கக் கூடாது. இதை அனைத்து மக்களும் மனதார கடைப் பிடிக்க வேண்டும். அதற்காகவே தான் நான் இலவசமாக பானி பூரியை பொது மக்களுக்குக் கொடுத்தேன்.

பெண் பிள்ளை பிறந்தால் வளர்ப்பதற்கு அதிக செலவு என்று கூறுவார்கள். எனக்குப் பெண் குழந்தை பிறந்ததைக் கேட்டு, என் உறவினர்கள், நண்பர்களும் இதையே தான் கூறினார்கள். பொருளாதார சுமை ஏற்பட்டுவிடும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப் படவில்லை. எனக்கு என் பெண் பிள்ளை தான் முக்கியம்.

 

அவர்களுக்கு நான் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். பெண் குழந்தையைப் பெற்று எடுக்கும் ஒவ்வொரு பெற்றோரும், தங்களை விடப் பெரிய அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க முடியாது என்பதைப் பெருமையுடன் நினைக்க வேண்டும். இதை மக்களிடம் கொண்டு செல்லவே இது போன்ற வித்தியாசமான ஒரு முயற்சியை நான் மேற்க் கொண்டேன்” எனக் கூறினார்.

 

பொதுவாக தந்தை தங்களுக்கு குழந்தை பிறந்து விட்டால் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் அஞ்சக் குப்தாவின் வித்தியாசமான கொண்டாட்டத்தை அந்த பகுதி மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.