வட இந்தியாவில் உள்ள முக்கியமான மாநிலங்களில் ஒன்று ஹரியானா. ஹரியானாவில் அமைந்துள்ளது பஞ்ச்குலா மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது பிஞ்சூர். இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளது. ஆனால், இந்த பகுதியில் சாலை வசதி தரமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.


பள்ளி மாணவிகள் காயம்:


பிஞ்சூர் பகுதிக்கு அருகில் உள்ளது நௌலதா கிராமம். இன்று காலை 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் உள்பட ஏராளமான பயணிகளுடன் அந்த மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாலையில் பயணித்தது. அந்த கிராமத்தில் உள்ள சாலை மோசமாக இருந்த நிலையில், ஓட்டுநர் வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.


இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகியது. இதில், பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட பலரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக சாலையில் சென்ற சக வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.






சிகிச்சை:


தற்போது, மாணவிகள் மற்றும் பேருந்தில் பயணித்த சக பயணிகள் பிஞ்சூர் நகர மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சிலர் பஞ்ச்குலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் மட்டும் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விபத்தில் காயம் அடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.


இந்த விபத்திற்கு ஓட்டுனர் பேருந்தை வேகமாக ஓட்டியது மட்டுமின்றி, சாலை மோசமாக இருந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் சௌத்ரி இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.  கடந்த வாரத்தில் மானேசர் – பல்வால் எக்ஸ்ப்ரஸ் வே சாலையில் கார் – டிரக் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.