ஹரியானா அடுத்த குருகிராமில் உள்ள அர்ஜூன் நகரில் உள்ள தகனக் கூட்டத்தின் (சுடுகாடு) சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அர்ஜூன் நகரில் உள்ள தகன மேடைக்கு பின்புறம் உள்ள கேட் சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இறந்தவர்களின் உடலை மீட்டனர். 






இந்த எதிர்பாராத இடிபாடுகளுக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் புதையுண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாகவும், மீதமுள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சம்பவ இடத்திற்கு வந்த நிர்வாக குழுவினர் மற்றும் அதிகாரிகள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. சுவரை ஒட்டிய தெருவில் நாற்காலிகளில் தனிநபர்கள் குழு அமர்ந்திருப்பது தெரியவந்தது. திடீரென சுவர் இடிந்து, இடிபாடுகளுக்குள் அமர்ந்திருந்தவர்கள் புதைந்தனர். அருகில் இருந்தவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓட முயற்சிப்பது இந்த காட்சிகளில் தெளிவாக தெரிகிறது. சில பேர் தப்பிக்க முயற்சித்தும் பலனின்றி இடிபாடுகளுக்குள் சிக்கினர். அதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்ய விரைந்து, இடிபாடுகளுக்கு சிக்கி இருந்தவர்களை உடனடியாக மீட்டனர். 






மருத்துவமனையில் அனுமதி: 


தகனக் கூட்டத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடனடியாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி பப்பு, கிருஷ்ணா, மனோஜ், குஷ்பு என்ற இளம்பெண் ஆகியோர் உயிரிழந்தனர். அர்ஜுன் நகர் காவல் நிலையம் அருகே மாலை 5:30 முதல் 6:00 மணிக்குள் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு 18 அடி உயரமுள்ள தகனச் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.


சம்பவ இடத்திற்கு விரைந்த குருகிராம் போலீசார் விசாரணை நடத்தி உடல்களை கைப்பற்றினர். நீண்ட நாட்களாகவே சுவரில் நிலை மோசமாக இருந்ததாகவும், அதில் பாதுகாப்பிற்காக சில மரத்தில் ஆன கட்டைகளால் முட்டு கொடுத்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த நேரத்தில்தான் சுவருக்கு அருகில் சிலர் அமர்ந்திருந்தபோதும், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோதும், கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.