ஹரியானா மாநிலம் யமுனாநகரில் 80 அடி உயர ராவணன் உருவபொம்மை பொதுமக்கள் மீது விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனாநகரில் தசரா விழாவையொட்டி நேற்று ராவணன் வத நிகழ்வு நடைபெற்றது. அப்போது எரிந்து கொண்டிருந்த 80 அடி உயர ராவண உருவம் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தின் மீது விழுந்தது. நல்ல வேளையாக எந்தவொரு உயிர் பலி இல்லை என்றாலும், ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோவை ANI செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ராவணன் எரிந்து கொண்டிருக்கும்போது அதன் மேலிருந்து சில குச்சிகள், மற்றும் சில பூஜைப் பொருட்கள் விழுகின்றன. அதை எடுப்பதற்காக அங்கிருந்த ஆண்கள் கூட்டம் உருவ பொம்மையை நோக்கி நகருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ராவண உருவபொம்மை திடீரென கீழே சரிந்தது. இதை பார்த்த ஒரு சிலர் வேகமாக அங்கிருந்து நகர, ஒரு சில நபர்கள் மீது அந்த உருவ பொம்மை விழுந்தது. இருப்பினும் யாருடைய உயிருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து, யமுனாநகர் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தசரா மைதானத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எரிக்கப்பட்ட ராவண உருவ பொம்மை தரையில் விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காயங்கள் குறித்த வதந்திகளை யாரும் வேண்டாம். மற்ற இடங்களிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தசரா கொண்டாட்டங்கள் முடிவடைந்தது” என்று தெரிவித்தார்.
அதேபோல், ஹரியானாவில் மற்றொரு இடத்தில் ராவண பொம்மை எரித்தபோது, அதிலிருந்த வானவேடிக்கை வெடிகள் கூடியிருந்த மக்கள் மீது மோதி தாக்கியது. இந்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து புராணங்களின்படி, நேற்றைய நாளில் ராமர் சீதையை கடத்திய ராவணனை வதம் செய்தார் என கருதப்படுகிறது. அந்த நாளே தற்போது தசரா என்று கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும், தசரா கடைசி நாளில் ராவண வத நிகழ்வு நடைபெறுகிறது
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளாக நாடுமுழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று ராவணன், கும்பகரன் மற்றும் மேக்நாத்தின் உருவ பொம்மைகளை எரித்து, நாடு முழுவதும் திருவிழா முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.