மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தமிழ்நாடு அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான செந்தில் பாலாஜி என பலரை அலலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு:
இந்த நிலையில், சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தில்பாக் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 100 பாட்டில் மதுபானம், 5 கோடி ரூபாய் பணம், சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 300 வெளிநாட்டு துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. நேற்று தொடங்கிய சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது. 15 முதல் 20 அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆறு வாகனங்களில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டுக்கு சென்றனர்.
வீட்டுக்கு சென்ற உடனேயே எம்எல்ஏவின் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களின் தொலைபேசிகளை அமலாக்கத்துறை குழு கைப்பற்றியது.
யமுனாநகர், சோனிபட், மொஹாலி, ஃபரிதாபாத், சண்டிகர் மற்றும் கர்னல் ஆகிய இடங்களில் 20 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மதுபானம் மற்றும் பணத்தை தவிர, 4 முதல் 5 கிலோ எடையுள்ள மூன்று தங்க பிஸ்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கின் பின்னணி:
தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த பிறகும், யமுனாநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மண் மற்றும் கற்கள் சட்டவிரோதமாக தோண்டப்பட்டது. இது தொடர்பாக, ஹரியானா காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு, பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்தது.
சமீபத்தில், வருமான வரித்துறையின் சோதனையில் இந்திய வரலாற்றில் இதுவரை கைப்பற்றிடாத அளவுக்கு பணம் சிக்கியது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீடுகளிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து நான்கு நாள்கள், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பீரோக்கள் மற்றும் பெட்டிகள் நிரம்ப பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.