விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் FCPS செல் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் தண்ணீர் மற்றும் வெப்பம் உருவாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை ஜனவரி 1 ஆம் தேது விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது நேற்று பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் புவி வட்டார சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ' நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளும். குறிப்பாக கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் மற்றும் நெபுலாக்களை பற்றி ஆய்வு மேற்கொள்ளும்.
எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்திய பின், பூமியில் இருந்து 350 கி.மீ தாழ்வட்ட பாதையில் POEM என்ற பகுதியில் 10 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டது. அதில் ஒன்று தான் இந்த FCPS செல். தற்போது இதன் மூலம் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
பூமியில் மின்சாரம் தயாரிப்பது என்பது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். விண்வெளியில் சூரிய மின் தகடுகள் இல்லாமல் செல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாறுபட்டு இருக்கும். விண்வெளியில் ஈர்ப்பு விசை இருக்காது, வேதி மாற்றம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் இஸ்ரோ தரப்பில் கடந்த 10 ஆண்டுகளாக பாலிமர் எலக்ட்ரோலைட் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதனை சாதித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தரப்பில் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ள நிலையில், இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் மின் வாகனங்களுக்கான மின்சார தேவையை இது பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.