வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ’விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்து கொண்டாடி வருகிறது. பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளை மத்திய அரசு கடந்த ஓராண்டாக நிகழ்த்தி வருகிறது.
முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொல்லியல் துறைக்கு உள்பட்ட சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களை இலவசமாகப் பார்வையிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், ஜூலை 15ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 75 நாள்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது.
ஏற்கெனவே, 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
முன்னதாக தமிழ்நாட்டில் தென்காசியில் தனியார் பள்ளியில் 75ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் விதமாக, 75 அடி நீளத்தில் இந்திய வரைபடத்தை வரைந்தும், அதை மரக்கன்றுகள் கொண்டு அலங்கரித்தும் பசுமை விழாவாக கொண்டாடினர்.
நடிகர்கள், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்கள் முகப்பு படங்களிலும், கவர் ஃபோட்டோக்களிலும் தேசியக்கொடியை வைத்து சுதந்திர விழா தினத்துக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், நாட்டு மக்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியும், சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.