கட்சியின் உயர்மட்டக் குழு மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும் கட்டுப்பட்டு நடப்பதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து தேர்வாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சித்து, முதல்வருடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மேலும், தனக்கு ஆதரவைத் திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக சித்து சந்தித்து வருகிறார். நேற்று, டெல்லி சென்ற அவர்,காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். நேற்று, மாலையே சித்து முறைப்படி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசியல் நிலவரங்களில் கட்சி மேலிடம் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியிருந்தார். தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய அக்கடிதத்தில, "சித்துவின் நியமனம் கட்சியின் மூத்த தலைவர்களை நிச்சயம் காயப்படுத்தும். தற்போதைய மாநிலத் தலைவரான சுனில் ஜாகர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பதிலாக ஜாட் சீக்கியரை நியமிப்பது இந்து சமூகத்தினரை வருத்தப்படுத்தும். மாநிலளவில் இரண்டு ஜாட் சீக்கியர்கள் தலைமை வகிப்பது அதிகார சமமின்மையை காட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டெல்லியில் சோனியா காந்தியை சித்து சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பஞ்சாப் மக்களவை உறுப்பினர் மனிஷ் திவாரி தனது ட்விட்டரில்,"மாநில மக்கள்தொகையில் சீக்கியர்கள் 57.75 சதவீதம் உள்ளனர். இந்துக்கள், பட்டியல் சாதிகள் முறையே 38.49, 31.94 சதவீதமாக உள்ளனர். பஞ்சாப் மிகவும் முற்போக்கான மாநிலம். ஆனால், சமநிலை காக்கப்பட வேண்டும். சமத்துவம் தான் சமூக நீதிக்கான அடித்தளம்! ” என்று பதிவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்-ஐ சமாதானப்படுத்தும் முயற்சியாக, பஞ்சாப் மாநிலத்துக்கான காங்கிரஸ் மேர்பாவையாளர் ஹரிஷ் ராவத் நேற்று பஞ்சாப் விரைந்தார். இருவருக்கும் நடைபெற்ற முயற்சியில் சில முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த விசயத்தை காங்கிரஸ் மேலிடம் கையாண்ட விதம் குறித்து ராவத்திடம் கவலை தெரிவித்திருக்கிறார். நியமனம் செய்யப்படுவதற்கு முன்பே ஆரவாரமான அறிவிப்புகள், தேவையற்ற கொண்டாட்டங்கள்.
இருப்பினும், கட்சி மேலிடம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தான் கட்டுப்படுவதாகவும், சித்துவை தலைவர் பதவியில் அமர்த்துவதை தான் எதிர்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னை பற்றியும், தனது நிர்வாகத்தைப் பற்றியும் சித்து ட்விட்டரில் வெளியிட்ட அவதூறு கருத்துகளுக்கு சித்து மன்னிப்பு கோரிய பிறகே அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கேப்டன் தெரிவித்துள்ளார்.