சமீப காலமாக, கடும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வறட்டு இருமலால் மக்கள் அவதிக்கப்பட்டு வந்தனர். எனவே, இது கொரோனாவாக இருக்குமோ என குழப்பம் நீடித்து வந்தது.


ஆனால், பின்னர், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் H3N2 வைரஸால் காய்ச்சல் பரவி வந்தது தெரிய வந்தது. இது, ஹாங் காங் வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது.


அச்சத்தை ஏற்படுத்தும் பருவகால காய்ச்சல்:


நாட்டிலேயே இதுவரை, H3N2 வைரஸால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி, H3N1 வைரஸால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையை காட்டிலும் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். 


இந்தியாவில் இதுவரை H3N2 மற்றும் H1N1 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை வைரசுக்கும் கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளே உள்ளன. இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த புது வகை வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பியுள்ளது.


தொடர் கண்காணிப்பு:


இந்நிலையில், நிகழ்நேர அடிப்படையில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மூலம்
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பரவி வரும் காய்ச்சலை தொடர்ந்து உன்னிப்பாக
கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  


மேலும், இந்த காய்ச்சல், மார்ச் மாத இறுதிக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "பருவகால  காய்ச்சலை ஏற்படுத்தும் H3N2 துணை வகையின் அறிகுறிகள்மற்றும் இறப்பு விகிதத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.


பருவகால காய்ச்சலின் சூழலில் இளம் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள்
கர்நாடகா மற்றும் ஹரியானாவில் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவால் தலா ஒரு மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. மேலும், உலகளவில் கடந்த சில மாதங்களில் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


காய்ச்சல் எப்போது குறையும்?


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால காய்ச்சல் இரண்டு முறை உச்சநிலையை தொடுகிறது. ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரையிலும் மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்திலும். பருவகால காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் மார்ச் மாத இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே இந்த பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள மாநில கண்காணிப்பு அதிகாரிகள் முழுமையாக தயாராக உள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் ஹாசனில் 82 வயது முதியவர் ஒருவர் H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே முதன் நபராக உயிரிழந்துள்ளார்.


இவரின் பெயர் ஹேர் கவுடா. இவர், பிப்ரவரி 24ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மார்ச் 1ஆம் தேதி, உயிரிழந்தார். இவர், நீரிழிவு நோயாளி என்றும், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.