கியான்வாபி மசூதியின்(Gyanvapi Mosque) கட்டமைப்பை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் கமிஷனர் அஜய் மிஸ்ரா வாரணாசியில் உள்ள சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் தனது கண்டுபிடிப்புகளை அறிக்கை வடிவில் சமர்ப்பித்துள்ளார். அஜய் மிஸ்ராவின் அறிக்கையானது மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கியான்வாபி கட்டமைப்பிற்குள் அவர் மேற்கொண்ட ஆய்வின் கண்டுபிடிப்புகளை விவரிக்கிறது.
உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிட கோரிய வழக்கும் உள்ளது. இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகரின் உத்தரவின்படி கியான்வாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்க அஜய் மிஸ்ரா மேற்கொண்ட ஆய்வின்போது ஒரு 100 முஸ்லீம் மக்கள் இணைந்து ஆய்வை நடத்தவிடாமல் தடுத்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு முழுவதுமே இஸ்லாமியர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
மிஸ்ராவின் அறிக்கையின்படி, முஸ்லீம் தரப்பு மசூதி என்று கூறும் சர்ச்சைக்குரிய கட்டமைப்பிற்குள், மத்தியப் பகுதியின் வடமேற்குப் பகுதியில், தடுப்பிற்கு வெளியே இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் கல் சிற்பங்கள் உள்ளன. தாமரை மற்றும் சிலைகள் போன்ற இந்து சின்னங்களைக் கொண்ட பழங்கால கல் கட்டமைப்புகள், முந்தைய இந்து கோவிலின் எச்சங்கள், ஞானவாபி அமைப்பில் தெளிவாகக் காணப்படுகின்றன என்று அறிக்கை மேலும் கூறுகிறது. "பழைய கட்டமைப்புகளுக்கு அருகே இரும்பு கம்பிகள் மற்றும் கான்கிரீட்டைப் பயன்படுத்தி 'புதிய' கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன. வடக்குப் பக்கத்திலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும்போது, பழைய கல் செதுக்கப்பட்ட ‘சேஷ்நாக்’ சிற்பங்களைக் காணமுடிகிறது. இவை அனைத்தும் ஆதாரங்களுக்காக வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. கல் பலகைகளில் காவி வண்ணம் பூசப்பட்ட பழைய சிற்பங்களும் உள்ளன, மேலும் இதுபோன்ற பல சிற்பங்கள் தெளிவாக இந்து சிலைகள் மற்றும் சின்னங்கள் கியான்வாபி வளாகத்திற்குள் இருக்கின்றன." என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
ஸ்ரீகர் கௌரி சன்னதிக்கு விவரிக்கப்பட்டுள்ளபடி, செந்தூர காவி வண்ணம் பூசப்பட்ட நான்கு சிலைகள் வளாகத்தில் உள்ள ஒரு கல் பலகையில் தெளிவாகத் தெரிகிறது என்று அறிக்கை கூறுகிறது. அவை பூஜை, பூக்கள், போன்ற சடங்குகளின் அடையாளங்களைக் கொண்டுள்ளதாக அது குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்புகள் மற்றும் ஸ்லாப் ஆகியவை ஸ்ரீகர் கௌரி சன்னதியின் எச்சங்கள் என்றும், அவை மைய அமைப்பினுள் உள்ளதாகவும், இந்துக்கள் நுழைய முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே இதுவரை பக்தர்கள் நுழைவாயிலில் இருக்கும் சில சிலைகளை மட்டுமே வணங்கி சிருங்கர் கௌரியை வழிபட்டு வருகின்றனர்.
மஸ்ஜித்தின் கிழக்குப் பக்கங்களிலும் மேற்குப் பக்கங்களிலும் உள்ள கல் சிற்பங்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக மிஸ்ராவின் அறிக்கை குறிப்பிடுகிறது. அவை அனைத்தும் உடைந்த ஒரு பெரிய கட்டமைப்பின் தொடர்ச்சியான செதுக்கல்களாக இருந்தன என்பதைக் குறிக்கிறது அவரது அறிக்கை. கியான்வாபி கட்டமைப்பின் மையக் கட்டமைப்பு மற்றும் மூடப்பட்ட பகுதிகள், பூட்டிய பகுதிகள் உள்ளிட்டவற்றுக்கு சர்வே கமிஷனர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அதைத் தடுக்க முஸ்லிம் தரப்பு பல சாக்குப்போக்குகளை கூறியதாக அறிக்கை கூறுகிறது.
ஆய்வின் இரண்டாவது நாளிலும், தாமதத்தை ஏற்படுத்தியதால், பிற்பகல் 3.45 மணிக்கே நடவடிக்கைகள் தொடங்க முடிந்தது என்று மிஸ்ராவின் அறிக்கை மேலும் கூறுகிறது. பல இந்து நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள பழைய ஸ்ரீகர் கௌரி கோவிலில் உள்ள குங்குமப்பூச் சிற்பங்கள் உண்மையில் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முயற்சித்ததாக மிஸ்ரா கூறுகிறார். தற்போது காணக்கூடிய கட்டமைப்புகள் பழைய உடைந்த ஸ்ரீகன் கௌரி கோவிலின் மிச்சங்கள் என்றும், இந்த கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக இந்துக்களால் வழிபடப்பட்டு வந்ததாகவும் அவரிடம் கூறப்பட்டது.
மூடப்பட்ட பகுதியையும் ஆய்வு செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் முஸ்லிம் தரப்பு ஒத்துழைக்கவில்லை என்றும் மிஸ்ரா மேலும் தெரிவித்துள்ளார். இறுதியாக, மே 7ம் தேதி மாலை 4.50 மணிக்கு ஆய்வு நிறுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றத்தின் கருவூலத்தில் சீல் வைக்கப்பட்ட பாக்கெட்டுகளில், சர்வேயின் வீடியோ கோப்புகள் நடைமுறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சர்வே கமிஷனர் வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ரா குறித்து முஸ்லிம் தரப்பு குற்றம் சாட்டியதுடன், வாரணாசி நீதிமன்றத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய மனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மனு மே 7 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டாலும், பின்னர் மே 17 ஆம் தேதி, மீடியாக்களுக்கு செய்திகளை லீக் செய்ததாக சர்வே கமிஷனர் பதவியில் இருந்து மிஸ்ராவை நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து வக்கீல் விஷால் சிங் கமிஷனராக நியமிக்கப்பட்டு, 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அஜய் மிஸ்ராவை நீக்கியது ஒரு தவறான புரிதல் என்றும், அதை அவர் ஒருபோதும் கேட்கவில்லை என்றும் விஷால் சிங் ANI இடம் கூறியுள்ளார். விஷால் சிங் இப்போது மே 19 அன்று நீதிமன்றத்தில் 14, 15 மற்றும் 16 மே அன்று செய்யப்பட்ட ஆய்வின் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். 15 பக்க அறிக்கை சீல் செய்யப்பட்ட பேக்கேஜிங்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், கியான்வாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் தொடர்பான பழைய வழக்கிலும் ஒரு திருப்பம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.