பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பார்த்த ஒன்றுதான் என ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையை வழிநடத்திய முன்னாள் சிபிஐ நிர்வாகி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்,


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனைப் பெற்று வந்த பேரறிவாளன், நேற்று (மே.18) விடுதலையானார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை நேற்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், சமூக வலைதளப் பயனாளர்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




’எங்கள் குழு சிறப்பாக செயல்பட்டது’


இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல என்றும், பேரறிவாளன் விடுதலை எதிர்ப்பார்த்த ஒன்றுதான் என்றும், தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும் இவ்வழக்கின் முன்னாள் தலைமை சிபிஐ விசாரணை அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


”எங்கள் குழு இவ்வழக்கில் எந்த தடயங்களையும் விட்டுவிடாமல், சிறப்பான விசாரணையை மேற்கொண்டது. மூன்று நீண்ட மாதங்கள் இந்த வழக்கை விசாரித்து மூன்று நீதிபதிகள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளில் நீண்டநாட்கள்  எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு இதுவே ஆகும். 


’ராஜீவ் காந்தி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை...’ 




ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் எவரும் அப்பாவிகள் அல்ல. இது நாட்டில் நிகழும் மற்றுமொரு கொலை வழக்கு அல்ல. இச்சம்பவத்தால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் மட்டும் அல்லாமல், குண்டுவெடிப்பில் உயிரிழந்த பிற நபர்களின் குடும்பத்தினரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.  இந்திய நாட்டுக்கே எதிரான குற்றம் இது. ஒன்பது காவலாளர்கள் உள்பட 18 பேர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.  எஸ்பி இக்பால் தனது பிறந்த நாள் அன்றே கொல்லப்பட்டார். 


பிரதமராக தன் கடமையை செய்ததைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ராஜீவ் காந்தி எந்தத் தீங்கும் செய்யவில்லை. எங்கள் விசாரணையில் எந்தத் தனிப்பட்ட நபரையுமோ அல்லது கட்சியினரையுமோ தலையிட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்க தான் விரும்பவில்லை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.