உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஞானவாபி மசூதி விவகாரம்:
இந்து பெண்ககளின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, உள்ளூர் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இந்து பெண்களின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி (ஏஐஎம்) கமிட்டி மற்றும் உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. "1991 ஆம் ஆண்டின் வழிபாட்டு தலங்கள் சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டின் மத்திய வக்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் மனுதாரர்களின் கோரிக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல" என ஏஐஎம் கமிட்டி மனுவில் குறிப்பிட்டிருந்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி:
இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றமும் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக, மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய 'கார்பன் டேட்டிங்' முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்து மனுதாரர்கள் வேறு மனு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது.
மசூதி வளாகத்தில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.
ஞானவாபி மசூதியில் சிவலிங்கமா?
மேலும், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.
இதையடுத்து, சிலையின் தொன்மையை கண்டறிய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.