திருமணத்தைத் தாண்டிய உறவு இல்லை என்பதை நிரூபிக்க குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் திரன்கத்ரா தாலுகாவில் உள்ளது நிமக்நகர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா விஞ்சியா (39). இவருக்கும் இன்னொரு நபருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த திரு பிமானி (60) என்ற நபர் குற்றஞ்சாட்டினார். ஆனால், அதனை கீதா திட்டவட்டமாக மறுத்துவந்தார். 


இந்நிலையில், கீதா தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையை முக்க வேண்டும் என்று பிமானி கூறினார். மேலும், தானும் அவ்வாறு செய்யத் தயார் என்றும் யார் நிரபராதியோ அவருக்கு ஏதும் ஆகாது என்றும் பிமானி கூறினார். அதனால், இருவரும் கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கினர். இதில் இருவருக்குமே காயம் ஏற்பட்டுள்ளது. கீதா படுகாயமடைந்துள்ளார்.


இது குறித்து த்ரங்கபத்ரா தாலுகா போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். விஞ்சியா மீதும் பிமானி மீதும் வழக்குப்பதிவு செய்து தடுப்புக் காவலில் எடுத்தனர். இருவருமே நீதிபதியின் முன் நிலைநிறுத்தப்பட்டனர். சொந்த ஜாமீனின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பெண்ணைத் தூண்டி கையை எண்ணெய்யில் முக்கச் செய்த பிமானி மீது நடவடிக்கை எடுக்குமாறு பலதரப்பிலிருந்தும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. நிமக்நகர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் சந்து குதேச்சாவும் இதனை போலீஸாரிடம் வலியுறுத்தினார். ஆனால் போலீஸ் தரப்பிலோ, சம்பந்தப்பட்ட பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதா விஞ்சியாவின் கணவர் வாஷ்ராம் லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார். 


ஏன் இப்படிச் செய்தேன்!


கொதிக்கும் எண்ணெயில் கையை முக்கியது தொடர்பாக கீதா விஞ்சியா கூறும்போது, "கடந்த சில மாதங்களாகவே பிமானி என் மீது அவதூறு பரப்பி வந்தார். அதிகாலையில் என் கணவர் வேலைக்குச் சென்றதும் என் வீட்டினுள் யாரோ ஒருவர் நுழைவதாக அவர் ஊர் முழுக்கச் சொல்லிவந்தார். இதனால் என் கணவரை பலரும் இழிவாகப் பேசினர். நான் நிரபராதி என நிரூபிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கையை முக்க வேண்டும் என்று பிமானி கூறினார். அவருக்கு அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆதரவாக இருந்தனர். என் கணவருக்காக நான் எண்ணெய்யில் கையை முக்கினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. பிமான அவர் விரல் நுனியால் மட்டுமே எண்ணெய்யை தொட்டார். நான் கையை முக்கினேன்.


எனக்கு 13 வயதிருக்கும்போது என் கணவரை திருமணம் செய்தேன். 27 ஆண்டுகள் வாழ்வில் எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் ஊரார் என் மீது வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். பிமானி எனது அண்டை வீட்டுக்காரர். அவர் வீட்டில் ஐந்து ஆண்கள் உள்ளனர். நான் அவர் மீது புகார் கொடுத்தால் என்னாளும் என் கணவருக்கு இடையூறாகிவிடும் " என்று கூறினார்.


நிமக்நார் ராண் ஆஃப் கச் பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதியில் கல்வியறிவு மிகமிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.