ராஜஸ்தான் மாநிலம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்திய ஆர்ஏஎஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிட்டது அம்மாநில அரசு. இத்தேர்வில் ஆஷா கண்டாரா என்ற பெண் துணை ஆட்சியராக தேர்வாகியுள்ளார். ஆனால், அவர் எந்த நிலையில் இருந்து இந்த நிலையை அடைந்துள்ளார் என்பதுதான் அவரை தனித்துவப்படுத்தியுள்ளது.


8 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஷா கண்டாரா அவருடைய கணவரைப் பிரிந்தார். அப்போது அவர் பட்டப்படிப்பு கூட படித்திருக்கவில்லை. 2 குழந்தைகளுடன் சிறு வேலைகளை செய்து வாழ்க்கையை நகர்த்திவந்தார். ஆனால், அவர் வறுமையில் துவண்டு போகவில்லை. அதை எதிர்த்து நின்றார். பட்டப்படிப்பு படித்தார். போட்டித் தேர்வுகளுக்கும் ஆயத்தமானார். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஆர்ஏஎஸ் தேர்வை எழுதினார். ஆனால், அதன் முடிவு தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதற்கிடையில் அவருக்கு ஜோத்பூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர் வேலை கிடைத்தது. அந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அவர் வாழ்க்கையை நகர்த்தி வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ஏஎஸ் 2018 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் ஆஷா கண்டாரா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு விரைவில் துணை ஆட்சியர் பணி ஒதுக்கப்படவுள்ளது.


எதுவந்தபோது இரும்பு இதயம் மட்டும் கொண்டிருந்தால் சாதனைகள் வெகு தூரமில்லை என்பதை உணர்த்தி உதாரணப் பெண்மணியாக உயர்ந்து நிற்கிறார் ஆஷா கண்டாரா.


விவசாயி மகள்களின் சாதனை:


இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மூன்று மகள்களும் 2018-ஆம் ஆண்டில் எழுதிய ஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவருடைய இரண்டு மகள்கள் ஏற்கெனவே ஆர்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரிகளாக இருக்கும் வேளையில் தற்போது மேலும் மூன்று மகள்களும் அரசு அதிகாரிகளாகியுள்ளனர்.




ரோமா, மஞ்சு, அன்ஷு, ரீது, சுமன் ஆகிய தனது ஐந்து மகள்களும் அரசு அதிகாரிகளாகிவிட விவசாயி சாதேவ் சஹாரன், ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்ற ஆதிக்க சொலவடைகளைக்கு சவால் விடுத்திருக்கிறார்.


திருவனந்தபுரத்தில் ஓர் ஆனி சிவா...


ஜோத்பூரில் ஆஷா கண்டாரா என்றால் திருவனந்தபுரத்தில் ஆனி சிவா என்ற இளம் பெண்ணின் சாதனைப் பயணத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். காதலனை நம்பி படிப்பைக் கைவிட்டு குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்தான் ஆனி சிவா. ஆனால், கணவன் கைவிட்டுச்செல்ல ஐஸ் விற்பது, லெமன் ஜூஸ் விற்பது என்று சிறுசிறு வேலைகளை செய்துவந்தார்.




வாழ்க்கையில் அவருக்கு நேர்ந்த அவமானங்களும் துரோகங்களும் அவருக்கு புதிய உத்வேகத்தைத் தந்தது. வேலைசெய்துகொண்டே சமூகவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். 2019-ஆம் ஆண்டு காவலர் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற அவர் இப்போது காவல் துணை ஆய்வாளர் ஆகியிருக்கிறார். அவமானங்கள், படுதோல்வி எல்லாமே விதையாகும் என்பதை நிரூபித்துக்காட்டிய இந்தப் பெண்களை எல்லோருமே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.