கோவிலுனுள் நுழைந்ததற்கான தலித் குடும்பத்தை சேர்ந்த 6 பேர், 20 பேர் கொண்ட கும்பலால் குஜராத்தில் தாக்கப்பட்டுள்ளனர். 


கடந்த அக்டோபர் 26ஆம் தேதி நெர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிந்த் வகேலா  (39) , அவரது குடும்பத்துடன் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி கோவிலுக்குச் சென்றுள்ளார். இது உள்ளூரில் உள்ள உயர் சாதியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து அவர்கள் முதலில் வகேலாவின் நிலத்தில் போடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தினர். அதற்கு அவரும் அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களை உயர் சாதியினர் குழாய்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.






 


கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் மற்றொரு சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழாவில் நுழைந்தபோது, தாங்கள் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டதாக காயமடைந்த நபர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர், “அக்டோபர் 26ம் தேதி கால்நடைகள் எங்கள் நிலத்தில் நுழைந்ததை அறிந்து அங்கு சென்று பார்த்தோம். அப்போது கோடாரி, தடிகள், கம்பிகளை வைத்துக் கொண்டு சிலர் எங்கள் நிலத்தில் நின்றுக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே எங்கள் நிலத்தில் உள்ள பயிர்களைப் பாழ்படுத்தியிருந்தனர். எங்களைக் கண்டதும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் எங்களைத் தாக்கினர். ஏன் ராமர் கோவிலில் நுழைந்தீர்கள் எனக் கேட்டு எங்களை மீண்டும் மீண்டும் தாக்கினர். அவர்கள் என்னுடைய செல்ஃபோனையும் திருடிக்கொண்டனர். கிராமத்துக்குச் சென்று என்னுடைய அப்பாவை கொலை செய்யப்போவதாக தெரிவித்தனர். அவர்கள் கடுமையாக தாக்கியதால் எங்களுக்கு கை, தலைகளில் ரத்தம் வழிந்தது” என தெரிவித்தார்.


மேலும் இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி,  கொள்ளை, தாக்குதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு  சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.