குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படை வீரர்கள்  தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என  குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.


மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட கேபிள் பாலம் நேற்று மாலையில் அறுந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் நேற்று இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார்.


ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.


 






தற்போது, இந்த விபத்து குறித்து பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதி சான்றிதழை மாநகராட்சி அமைப்பு வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.


இந்நிலையில், பாலத்தில் இருந்த சிலர், அதை வேண்டுமென்றே ஆட்டியதாகவும் அதனால்தான் அது சரிந்து விழுந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்வாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நேற்று மதியம் பாலத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் விபத்தில் சிக்காமல் மயிரிழையில் உயர் தப்பியுள்ளனர்.


 






பாலத்தில் இருந்த இளைஞர்கள் சிலர், பாலத்தை ஆட்டியதை தொடர்ந்து அவர்கள் பாதியிலேயே வீடு திரும்பியுள்ளனர். இதன் பின்னர்தான், சில மணி நேரங்களுக்கு பிறகு, பாலம் இடிந்து விழுந்துள்ளது. 


தான் பார்த்த சம்பவத்தை விரிவாக விவரித்துள்ள கோஸ்வாமி, "நானும் எனது குடும்பத்தினரும் பாலத்தில் இருந்தோம். சில இளைஞர்கள் வேண்டுமென்றே பாலத்தை அசைக்க ஆரம்பித்தனர். இதனால், மக்கள் நடக்க சிரமப்பட்டனர். இந்த செயல் ஆபத்தானது என நான் உணர்ந்ததால், நானும் குடும்பத்தினரும் பாலத்தில் மேலும் செல்லாமல் திரும்பினோம். 


இது குறித்து பால ஊழியர்களிடம் எச்சரித்த போதும் அவர்கள் அலட்சியமாக இருந்தனர். ஆனால், டிக்கெட் விற்பனையில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இங்கு இல்லை என்று எங்களிடம் கூறினர். நாங்கள் சென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாலம் இடிந்து விழுந்ததால் எங்கள் அச்சம் உண்மையாகிவிட்டது. தீபாவளி விடுமுறைக்காக குடும்பத்துடன் மோர்பி சென்றிருந்தோம்" என்றார்.


பாலம் இடிந்து விழுந்ததில் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் பெற்றோர்களும் காணாமல் போனதாக அந்த இடத்தில் இருந்த பல குழந்தைகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.