நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பிலிருந்தே குஜராத் மாடல், நாடு முழுவதும் பேசுபொருளாக மாறின. கடந்த 2001ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சராக மோடி பதவியேற்ற பிறகு, அம்மாநில அசுர வளர்ச்சி அடைந்ததாக பல்வேறு தரப்பினர் கூறினர். 


குறிப்பாக, பூகம்பம், குஜராத் கலவரம் போன்ற சவால்களுக்கு மத்தியில் குஜராஜ் முதலமைச்சராக மோடி சிறப்பாக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினர் கூறினர். அதற்கு ஏற்றார்போல, தொழில் வளர்ச்சியில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு சவால் விடும் அளவுக்கு குஜராத் பெரிய முன்னேற்றத்தை பெற்றது.


குஜராத் மாடல்:


ஆனால், மனித வள மேம்பாட்டில் மோசமான இடத்திலேயே குஜராத் உள்ளது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் கல்வியறிவு விகிதம், சராசரி ஆயுட்காலம், குழந்தை இறப்பு விகிதம், மொத்த மூலதனச் செலவு போன்றவற்றில் குஜராஜ் பின்தங்கிதான் உள்ளது.


சமீபத்தில் கூட குஜராத் மாடல் குறித்து விவாதம் எழுந்தபோது, குஜராத் மாடலை விட தமிழ்நாட்டின் திராவிட மாடல் சிறந்தது, கேரள மாடல் சிறந்தது போன்ற எதிர்வாதங்கள் கிளம்பின. ஏன் என்றால், குஜராத்தை போல் அல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி அனைவருக்குமானதாக இருந்து வருகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறினர்.


தொழில் வளர்ச்சிக்கு இணையாக மனித வள மேம்பாட்டிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பல்வேறு ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வந்தது. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குஜராத்தில் 40,000 பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பெண்கள் பாதுகாப்பில் பின்தங்கியுள்ள குஜராத்:


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016இல் 7,105 பெண்களும், 2017இல் 7,712 பெண்களும், 2018இல் 9,246 பெண்களும், 2019இல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டில், 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில், காணாமல் போன பெண்களின் மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது.


பெண்கள் காணாமல் போனது தொடர்பான மற்றொரு அதிர்ச்சி அறிக்கையை குஜராத் அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு, குஜராத் சட்டப்பேரவையில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019-20) 4,722 பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.


இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறுகையில், "சில காணாமல் போன வழக்குகளில், சிறுமிகளும் பெண்களும் அவ்வப்போது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதை நான் கவனித்துள்ளேன்.


காணாமல் போனோர் வழக்குகளை தீவிரமாகக் கையாளாததுதான் காவல்துறையின் பிரச்சனை. இது போன்ற வழக்குகள் கொலையை விட தீவிரமானது. ஏனென்றால், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். மேலும் காணாமல் போன வழக்கை கொலை வழக்கை போல கடுமையாக விசாரிக்க வேண்டும்" என்றார்.