Gujarat, Himachal Pradesh election result: குஜராத் , இமாச்சல் பிரதேச சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே இரு மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவை ஆட்சி கட்டிலில் இருந்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இறக்குமா என்பதை இன்று எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை தெளிவுபடுத்திவிடும். குறிப்பாக, 25 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவானது, தொடர்ந்து வலிமையாகவே உள்ளது.  


 


இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


அதில், மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


இமாச்சலை பொறுத்தவரை, 1985க்கு பிறகு, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 5 முறை இமாச்சலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான வீரபத்ர சிங் மறைவின் காரணமாக, அந்த போக்கு மாறும் என கூறப்படுகிறது.


குஜராத்


கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக அங்கு ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி தேர்தலில் களம் இறங்கியது.


குறிப்பாக பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்ள பல்வேறு மூத்த தலைவர்கள், தற்போதைய எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை.  


1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. குஜராத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது. 


ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டன. 


படேல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாநிலம் முழுவதும் இரண்டு பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர். அது, தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


முதற்கட்டமாக, சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 இடங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக மத்திய மற்றும் வடக்கு குஜராத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலில், 63.3 சதவிகித வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 59.11 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.