பா.ஜ.க. வெற்றி:


பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ள குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.


மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் வரலாறு படைத்துள்ளது பாஜக. இதுவரை நடைபெற்ற குஜராத் தேர்தலில் இந்த மாதிரியான அதிக இடங்களில் வேறு எந்த கட்சியும் வெற்றி பெற்றதே இல்லை.


பா.ஜ.க. புது சாதனை:


கடந்த 1985ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 149 தொகுதிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது, பாஜக அதை முறியடித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. அதற்கு ஏற்றார்போல், முடிவுகளும் இருந்தன.


2017 தேர்தலில், 99 தொகுதிகளில் பாஜகவும் 78 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றிருந்தது. இந்த தேர்தல் பிரச்சாரம் படுமந்தமாக இருந்த நிலையில், முடிவுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.


அதற்கு காரணம் ஆம் ஆத்மி ஏற்படுத்திய தாக்கம் என்றே கூறப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே இடையே நிலவிய மும்முனை போட்டி இறுதியில் பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.


பொதுவாக நகர்ப்புற தொகுதிகளை பொறுத்தவரை, பாஜக பலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் காங்கிரஸ் அதிக பலத்துடன் காணப்படும். ஆனால், இந்த முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பாஜகவே வெற்றிபெற்றுள்ளது.


அதேபோல, பழங்குடியினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட இடங்களிலும் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பழங்குடியினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 27 தொகுதிகளில் 23 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.


கோட்டையிலும் கோட்டை விட்ட காங்கிரஸ்:


பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் மத்திய, வடக்கு குஜராத்திலும் அக்கட்சி பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 


தற்போது, ஆட்சி அமைப்பதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது பாஜக. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்பட அவரது அமைச்சரவை முழுவதும் நேற்று ராஜினாமா செய்தது. இதையடுத்து, வரும் டிசம்பர் 12ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக பதவியேற்பார் என பா.ஜ.க. நேற்று முன்தினம் அறிவித்தது.


பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை மதியம் 2 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


பூபேந்திர படேல் சாதனை:


பூபேந்திர படேலை பொறுத்தவரை, கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார். 


தொடக்கத்தில், பாஜகவில் கடும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. மூத்த அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் காரணமாக, அவர்கள் சுயேட்சையாக களமிறங்கி இருந்தனர். எனவே, அது பாஜகவுக்கு பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என ஒட்டுமொத்த பாஜக மேலிடமும் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது.