குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஜக்குபாய் படேல். இவரும், இவருடைய கூட்டாளிகளான கேதன் படேல், விபுல் படேல், மிட்டல் படேல் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு டாமனில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் இருக்கின்றனர். 


மேலும், இவர்கள் மீது டாமன், குஜராத், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல், மதுபான கடத்தல் உள்ளிட்ட 35க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் மீது தாக்குதல், செக் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 


இந்தநிலையில், சுரேஷ் ஜகுபாய் படேல் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 9 குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடந்த ஜூன் 19ம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 1,62 கோடி ரோக்கமாகவும், அவை அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகளாக கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள், வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், இந்த சோதனையில் 100 க்கு மேற்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள், பண பரிமாற்ற தொடர்பான ஆவணங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுரேஷ் படேல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளில் ரூ. 100 கோடி வரவு இருந்ததாகவும், இந்த பணத்தை குற்றச்செயல்களின் மூலம் கிடைத்தாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக சுரேஷ் போலியாக பல்வேறு நிறுவனங்களை தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. 


சுரேஷ் படேல் மீது குஜராத்தில் 10க்கும் மேற்பட்ட மது கடத்தல் வழக்குகள், ஏழு போலி மற்றும் மோசடி வழக்குகள், எட்டு கொலை அல்லது கொலை முயற்சி வழக்குகள், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த ஐந்து வழக்குகள் மற்றும் பல்வேறு குற்றங்களில் ஒரு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 174-ஏ இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுரேஷ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.