குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது என பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் வாக்களித்த பின் கூறினார். 






ஜனநாயக திருவிழா:


குஜராத் மாநிலத்தில் நடைபெறும் இறுதிகட்ட வாக்குப்பதிவில் பிரதமர் மோடி அகமதாபாதில் உள்ள சபர்மதி தொகுதியில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்துக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்”  என  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 


இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது, தேர்தல் களத்தில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். அகமதாபாத், வடோதரா போன்ற குஜராத்தின் வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 2 கோடி 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர், 1லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 26,409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது, 36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 


விறுவிறுப்பான தேர்தல்:


குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1 ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில்  மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமான தேர்தல் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமான தேர்தல் 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதற்கட்டத் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர் போன்ற 14 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்களிப்பதற்கு 26 ஆயிரத்து 409 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 36 ஆயிரம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.


மோடி வாக்களிப்பு:


இந்நிலையில், அகமதாபாத், சபர்மதி தொகுதியைச் சேர்ந்த நிஷான் பள்ளியில் பிரதமர் மோடி வாக்காளர்களுடன் வாக்காளர்களாக வரிசையில் நின்று இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார்.


பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் நரன்புராவில் உள்ள அங்கூர் தொகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தனது வாக்கினைப் பதிவு செய்கிறார். அதேபோல், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அகமதாபாத்தில் உள்ள ஷிலாஜ் தொடக்கப் பள்ளியில் வாக்களிக்க உள்ளார்.