இரவில்...

 

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நிலையம் - சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியான, பேரமனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி  ரயில் சென்று கொண்டு  இருந்தது. அப்பொழுது பேரமனூர் பகுதியில் , மூன்றாவது தண்டவாளம் அருகே , அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் தொடர் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 



 

சம்பவ இடத்தில் பலி

 

இதனை அடுத்து தொடர்வண்டியை இயக்கி வந்த, ஓட்டுநர் உடனடியாக சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தொடர்வண்டி நிலைய அலுவலகத்திற்கு, சென்று இந்த சம்பவம் குறித்து தகவல் பதிவு செய்தார். இதனையடுத்து இதுகுறித்த தகவல் தாம்பரம் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைஅடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இருப்புப் பாதை காவலர்கள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர். இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் ,  விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் 25 வயதிற்குள்ளே இருக்கும் என்பதால், தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். நள்ளிரவில் விபத்து நடைபெற்றதால், சுமார் காலை 9 மணி வரை இருப்பு பாதியிலேயே உயிரிழந்த இருவரின் உடல் இருந்தது..

 

 



 

உள்ளூர் கபடி வீரர்

 

இதனை அடுத்து உயிரிழந்தவர்களிடம் இருந்த உடமைகளை கைப்பற்றிய காவல் துறையினர், அவர்கள் செல்போனை கைப்பற்றி அதிலிருந்து தொலைபேசி மூலம் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து,  முதற்கட்டமாக நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர், கடலூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (22), என்பதும் இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்  கடந்த பத்து மாதத்திற்கு மேலாக பணியாற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அலெக்ஸ் கடலூர் பகுதியில் பிரபல கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி வேலை  செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உடன் இருந்த பெண் விபரமும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.



 

 

உயிரிழப்பு

 

உயிரிழந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (21) இவரும், மறைமலைநகர் பகுதியில் உள்ள அதே தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. இருவரும் அதே பகுதியில் தங்கி வந்ததால், அலெக்ஸ் மற்றும் ஷெர்லின் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். அதேபோல் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பேசி பழகியும் வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல், இருவரும் நள்ளிரவில் சந்தித்து ரயில்வே இருப்பு பாதை அருகே, பேசிக் கொண்டிருந்த இப்பொழுது தான் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 



 

இதனை அடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து, இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இளம் காதல் ஜோடிகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது