பால விபத்து நடந்த மொர்பி தொகுதியில் பாஜக அபார வெற்றிபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 30ம் தேதி மோர்பி மாவட்டத்தில் அந்த கோர விபத்து நிகழ்ந்தது. குஜராத் புத்தாண்டு மற்றும் வார விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் புதிதாகத் திறக்கப்பட்ட மோர்பி தொங்கு பாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
150 ஆண்டுகால பழமையான பாலம் சரியாக புதுப்பிக்கப்படாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் பாரம் தாங்காமல் அந்த பாலம் அறுந்தது. அந்த பாலத்தில் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் விழுந்ததில் சுமார் 140 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு, தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நடந்த இந்த நிகழ்வு பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக அந்த பாலத்தில் டிக்கெட் விற்றவர்கள், காவலர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்தை அரசியலாக்காது என்று ராகுல் காந்தி கூறியிருந்தாலும், காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வந்தனர்.
சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட மோர்பி தொகுதியில் பாஜக அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. மோர்பி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அம்ருதியா காந்திலால் 1 லட்சத்து 14 ஆயிரத்து 538 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றுள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் 59.21 சதவீதம் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பட்டேல் ஜயந்த் ஜெராஜ்பாய் 52 ஆயிரத்து 459 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடமும், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட பங்கஜ் கண்டிலால் ரன்சரியா 17ஆயிரத்து544 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மோர்பி பால விபத்து குஜராத் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறிவந்த நிலையில், இந்த விபத்து குஜராத் தேர்தலில் மட்டுமல்ல, மோர்பி தொகுதியில் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.