குஜராத் சட்டப்பேரவை தேர்தல்  இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக  டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக  டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்  டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகிறது. 

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார். 

தேர்தல் ஏற்பாடுகள்:

மாநிலத்தில் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 4.90 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

மாநிலத்தில் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - முக்கிய நாட்கள்:

குஜராத் தேர்தல் முதல் கட்டம் (89 தொகுதிகள்) இரண்டாவது கட்டம் (93 தொகுதிகள்)
மனு தாக்கல் ஆரம்பம் நவம்பர்,5,2022 / சனிக்கிழமை நவம்பர்,10,2022 / வியாழக்கிழமை
மனு தாக்கல் முடிவு நவம்பர்,14,2022/ திங்கள்கிழமை நவம்பர், 17,2022/ வியாழக்கிழமை
வேட்பு மனு பரிசீலனை  நவம்பர்,15,2022/ செவ்வாய் கிழமை நவம்பர்,18,2022/ வெள்ளிக்கிழமை
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் நவம்பர்,17,2022/வியாழக்கிழமை நவம்பர்,21,2022/திங்கள் கிழமை
தேர்தல் நடைபெறும் நாள் டிசம்பர்,1, 2022/ வியாழக்கிழமை டிசம்பர், 5,2022/ திங்கள் கிழமை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் டிசம்பர்,8,2022 /வியாழக்கிழமை டிசம்பர்,8,2022 /வியாழக்கிழமை

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்:

குஜராத் மாநிலத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 24 ஆண்டுகளாக குஜராத்த்தில் ஆட்சியில் தொடரும் பா.ஜ.க. கட்சிக்கு இம்முறை சவால் மிகுந்த தேர்தலாக இருக்கும். 

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹிமாச்சல பிரதேச தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட போதே குஜராத் தேர்தல்  தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார்,” ஹிமாச்சல பிரதேசத்தின் காலநிலையை கருத்தில் கொண்டே அம்மாநிலத்தின் தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்பட்டது.” என்று தெரிவித்திருந்தார்.