குஜராத்தில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு வாகனங்கள் மீது அந்த இளைஞர் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதனால், ஒரு பெண் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த இளைஞர் செய்த செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்தியதில் சிறிய குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் 'ஓம் நமசிவாய' என்றும் 'நெக்ஸ்ட் ரவுண்ட்' என்றும் அவர் சாலையில் கத்தியுள்ளார்.
போதையின் உச்சத்தில் இளைஞர்:
குஜராத் மாநிலம் கரேலிபாக்கில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிவேக கருப்பு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அருகில் நின்றிருந்த பலர் மீது கார் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஹேமலிபென் படேல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தால் ஜெய்னி (12), நிஷாபென் (35), அடையாளம் தெரியாத 10 வயது சிறுமி மற்றும் அடையாளம் தெரியாத 40 வயது ஆண் உட்பட மூன்று முதல் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் போலீசாரும், அருகில் இருந்தவர்களும் கூடியிருந்தபோது, கடுமையாக சேதமடைந்த காரிலிருந்து ஓட்டுநர் போதையில் வெளியே வந்தார்.
நடந்தது என்ன?
வெளியே வந்த அவர் செய்த செயல்தான் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு டி-சர்ட் அணிந்திருந்த ஓட்டுநர், நிலைகுலைந்து, கத்தத் தொடங்கினார். "'ஓம் நமசிவாய' என்றும் 'நெக்ஸ்ட் ரவுண்ட்' என்றும் மீண்டும் மீண்டும் கத்தினார்.
விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறை இணை ஆணையர் லீனா பாட்டீல், ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததையும், அவர் கைது செய்யப்பட்டதையும் உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில், "இருசக்கர வாகனம் மீது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் அல்லது வேறு ஏதேனும் பொருள் சம்பந்தப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.