குஜராத்தில் கோயிலுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வன்முறைத் தாக்குதல் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் காந்திதம் பகுதியில் தான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 26-ஆம் தேதி, பச்சாவூ காவல் சரகத்துக்கு உட்பட்ட நேர் கிராமத்தில் இச்சம்பவம் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் கிஷோர்ஷின் ஜாலா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 பேர் சேர்ந்த கும்பல் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருகிறோம் என்றார்.


தலித் குடும்பத்தைத் தாக்கியதாக கானா அஹிர், ராஜேஷ் மகாராஜ், கேஸ்ரா ராபாய், பாபாய் ராபரி, கானா கோலி, ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு, தாக்குதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிந்த வகேலா குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அவர் நேர் கிராமத்தில் உள்ள ராமர் கோயிலில் முக்கியமான பூஜை நடந்து கொண்டிருந்த போது குடும்பத்துடன் அங்கு வந்தார் என்பதால் ஆத்திரமடைந்து தாக்கியுள்ளனர்.


இது நடந்த ஒரு மணி நேரத்திலேயே அவர் குடும்பத்தினர்  மீது இன்னொரு தாக்குதல் நடந்தது. கோவிந்த் வகேலாவின் வயலில் கால்நடைகளை அனுப்பி மேயவிட்டு பயிர்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதனையறிந்த கணேஷ் வகேலா சம்பவ இடத்துக்குச் செல்ல அங்கே அவர் வன்முறை கும்பல் பைப், தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளனர். எவ்வளவு தைரியிம் இருந்தால் குடும்பத்துடன் ராமர் கோயிலுக்கு வருவீர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


சத்தம் கேட்டு அவங்கு வந்த கனேஷின் தாயார் பாதிபென், தந்தை ஜகாபாய், அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் தாக்குதலுக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்ட அனைவரும் பூஜ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாதியால் யாரையும் பிரிவினைப்படுத்தி கோயிலுக்குள் வர தடுக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டம். ஆனால், இதையும் மீறி இவ்வாறான தலித் விரோத சம்பவங்கள் நடந்து வருகின்றன.


கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில், உள்ளூர் ஆஞ்சநேயர் கோயிலில் 2 வயது குழந்தை தவறுதலாக நுழைந்துவிட்டது. அந்தக் குழந்தை தலித் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், 23,000 ரூ. அபராதம் செலுத்தும்படி அந்தக் குடும்பத்தினருக்கு தண்டனை வழங்கப்பட்டது. தற்போது குஜராத்தில் தலித் குடும்பத்தின் மீது வன்முறை தாக்குதல் நடந்துள்ளது.