மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக ஊதியம் மற்றும் பொருள்களுக்கான நிதியை வெளியிட இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஊதியத்திற்கான 100 சதவீதச் செலவையும் பொருட்களுக்கான 75 சதவீதச் செலவையையும் மத்திய அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டின் மொத்தச் செலவு ரூ.64,189 கோடியாகும்


மத்திய அரசு 2021-22 நிதியாண்டின் ஆரம்ப பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.73 ஆயிரம் கோடியை வழங்கியிருந்தது. ஆனால், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி நிலவரப்படி, மொத்த செலவீனங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மட்டும் ரூ. 79 கோடியை நெருங்கியுள்ளன (( விடுவிக்கப்பட்ட நிதி + பொருட்கள் செலவிற்காக நிலுவையில் உள்ள நிதி + பணிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை). குறிப்பாக, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நிதி இருப்பு நெகட்டிவாக இருப்பதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.


முன்னதாக, கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஊரகப் பகுதிகளில் பசிப்பிணியை போக்கும் வகையில், 2020- 21 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.1,01,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 


 



நிதி விடிவிப்பு


  


இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கியதாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படியாக நீக்கப்பட்டதாலும்  2021-22 நிதியாண்டின் ஆரம்ப பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.73 ஆயிரம் கோடியை மட்டும் மத்திய நிதி அமைச்சகம் ஒத்துக்கியது. ஆனால், தற்போது ஒரு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அதன் முதல் பாதிக்குள் தீர்ந்து விட்டது. நிலுவைத் தொகை மட்டும் 8,000 கோடியாக உள்ளது.   


நடப்பு நிதியாண்டில் இதுவரை 222 கோடிக்கும் அதிகமான பணியாளர் தினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மொத்தம் 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலை கிடைத்துள்ளது. மொத்த வேலைத் தேவையில் 99.63 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலை வழங்கப்பட்டுள்ளோரில் 87.35 சதவீதம் பயனாளிகள் தங்கள் விருப்பத்துடன் வேலைக்கு வந்துள்ளனர். 



222 கோடிக்கும் அதிகமான பணியாளர் தினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன


 


பொதுவாக, வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாத செலவினங்கள் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தால்,அது நாடாளுமன்றத்திடம் கூடுதல் நிதி (துணை மதிப்பீடுகள்- Supplementary Grants) கேட்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் கூடுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், அதுவரை லட்சக்கணக்கான மக்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய  தொகையையும் வழங்கப்படாத சூழல் எழுந்துள்ளது. மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியில் இருந்து ஊதியத் தொகையை உறுதி செய்யுமா என்பதும் கேள்வியாக உள்ளது. 



6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலை கிடைத்துள்ளது


 


முன்னதாக, ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட செய்தி அறிக்கையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக ஊதியம் மற்றும் பொருள்களுக்கான நிதியை விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி வெளியிட இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்படும் போதெல்லாம், நிதியை வழங்குமாறு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. முந்தைய நிதியாண்டில், பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.50,000 கோடி நிதியை இத்திட்டத்திற்கு நிதியமைச்சகம் ஒதுக்கியது" என்று தெரிவித்துள்ளது. 


மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு: மாநில அரசுகள் அதிகமான பணியாளர் தினங்களை உருவாக்கி வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டிவருகின்றன.இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் (Demand Drive Scheme) உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புத் தரவேண்டும். ஆனால், வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டமாக (Supply- Driven Scheme) மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.