இந்தியா- அமெரிக்கா இடையேயான 20-வது கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் இன்று தொடங்கியது. யுத் அப்யாஸ் 2024 எனும் இந்தப் பயிற்சி செப்டம்பர் 22 வரை நடைபெறும்.


உலகின் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சி:


கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக ஆண்டுதோறும் இப்பயிற்சி மாறி மாறி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் இந்திய தரப்பில் இருந்து ராஜ்புத் படைப்பிரிவு உட்பட  பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 600 ராணுவ வீரர்கள்  பங்கேற்றுள்ளனர்.


அமெரிக்க ராணுவத்தின் அலாஸ்காவைச் சேர்ந்த படைப்பிரிவுகளின் 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை சாசனம் 7-வது பிரிவின் கீழ், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருதரப்பு கூட்டு ராணுவ திறன்களை அதிகரிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.


நடைமுறை உத்திகள், தொழில்நுட்பங்கள், கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவும். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான  உறவுகள் விரிவாக்கம் ஆகியவற்றுக்கும் இந்தப் பயிற்சி உதவும்.


இந்தியாவுடன் கைக்கோர்த்த அமெரிக்கா:


பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கர்னல் அமிதாப் சர்மா, இதுகுறித்து கூறுகையில், "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரு தரப்பினரின் கூட்டு ராணுவத் திறனை மேம்படுத்துவதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கம். பாலைவன சூழலில், பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்படும்" என்றார்.


மாறி வரும் உலக சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் சவால்விடுத்து வரும் சீனா, அனைத்து வகைகளிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷியாவை கண்டு, அதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது. அதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷியா மீது அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  


இது, தனக்கு நேர்ந்திடாதவாறு தடுத்திடும் நோக்கில் வெளிநாடுகளில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது. தன் மீது பொருளாதார தடை விதித்தாலும் அதை எதிர்கொண்டு, தங்கள் நாட்டு கப்பல்கள் தடையின்றி செல்வதற்கு வெளிநாட்டில் கட்டப்படும் கடற்படை தளங்களை பயன்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. 


இப்படிப்பட்ட சூழலில், இந்தியா, அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவ பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.