கனமழையால் ஆந்திராவின் விஜயவாடா உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்தனர். மேலும், தாழ்வான பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 40,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆந்திராவை வெளுத்து வாங்கிய கனமழை:
விஜயவாடாவை உள்ளடக்கிய என்டிஆர் மாவட்டம், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 24 பேர் மரணம் அடைந்தனர். என்டிஆர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக குண்டூரில் ஏழு பேரும், பல்நாடு மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஆந்திர மாநிலம் முழுவதும் 2.35 லட்சம் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திற்கு லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரண் குமார் நிதியுதவி அளித்துள்ளார்.
நிதி உதவி அளித்த ஜுவல்லரி நிறுவனர் கிரண் குமார்:
விஜயவாடாவுக்கு நேரடியாக சென்ற கிரண் குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கிரண் குமார், "75 வயதிலும் ஆந்திர மக்களின் நலனுக்காக கடுமையாக உழைத்தவர் சந்திரபாபு.
வீடு கூட செல்லாமல் பேருந்தில் தங்கியும், ஆட்சியர் அலுவலகத்திலேயே தங்கியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகிறார். எனவே, அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நம்மை தேடி பணம் வராது. எனவே, தங்களால் இயன்ற உதவி செய்தால் அது அரசுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.
முன்னதாக, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வெள்ள நிவாரணத்திற்காக 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்தத் தொகையில் 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது.
இதையும் படிக்க: வாட்ஸ் அப்-ன் புதிய அப்டேட் - மெட்டா நிறுவனம் வெளியிட்ட தகவல்! இந்திய பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?