மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் வழங்கிவிட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


மாநிலங்கள் பெரும்பாலும், குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசு மீது வைத்துவந்த முக்கியமானக் குற்றச்சாட்டு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காமல் இழுத்தடிக்கிறது என்பது தான். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலங்கானா வருகை தந்தபோது, தெலங்கானா வருகை தரும் அமித்ஷா அவர்களே, தெலங்கானாவிற்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 2247 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள் என்று மக்களுக்கு சொல்லுங்கள் என்று ஆளும் கட்சியான தெலங்கானா ராஸ்ட்ரிய சமிதி கட்சி கேள்வி எழுப்பியிருந்தது. அதேபோல, மேற்குவங்கத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான 6,375 கோடி ரூபாயை மத்திய அரசு எப்போது வழங்கும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கேள்வி எழுப்பியிருந்தார்.





சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் மோடியிடம் 15.5.2022 வரை தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையானது 14,006 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு மாநிலங்களின் வருவாயனது முழுமையாக சீரடையாமல் இருக்கக்குடிய நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காலத்தை ஜுன் 2022க்குப் பின்னரும் குறைந்தது அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துத் தரவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.




முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜிஎஸ்டி கவுன்சிலைப் பொறுத்தவரை பிரதமர் மோடியோ, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை நிறுத்த நினைத்தாலும் அது முடியாது. ஏனென்றால் ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கின்ற முடிவில் தலையிடுகின்ற உரிமை பிரதமருக்கோ, நிதியமைச்சருக்கோக் கிடையாது என்று பேசியிருந்தார்.  




இந்தநிலையில், மே 31ம் தேதி வரை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.86,912 கோடியை விடுவித்திருக்கிறது மத்திய அரசு. இதில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையில் ரூ.9, 062 கோடியை விடுவித்திருக்கிறது. நிதியை விடுவித்துள்ளதோடு, மாநில அரசுகள் இனி ஜூன் மாதத்திற்கு தான் நிதியை கேட்டுப் பெற வேண்டுமேத் தவிர, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் மே 31ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு முழுமையாக கொடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


மேலும்,  ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் மத்திய அரசிடம் 25,000 கோடி தான் இருக்கிறது என்றாலும், மீதமுள்ள தொகையானது மத்திய அரசின் சொந்த நிதியான செஸ்-ல் இருந்து விடுவிக்கலாம் என்று முடிவெடுக்கப்படிருக்கிறது என்று கூறியுள்ளது.