ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில், டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீது வரி விகிதங்களை குறைப்பது மற்றும் ஏற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.


இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை இன்றே விடுவிக்கப்படும் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "மத்திய அரசின் நிதி ஆதாரங்களில் இருந்து ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்படும். இந்த விடுவிப்பின் மூலம், ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இல் திட்டமிடப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை மத்திய அரசு அளிக்கும்.


இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம். அதே தொகை எதிர்கால இழப்பீடு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும்.


ஜிஎஸ்டி இழப்பீட்டின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை இன்று முதல் அளிக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளோம். அதாவது, ஜூன் மாதத்திற்கான மொத்த நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும்.


ராப் மீதான ஜிஎஸ்டி குறைப்பு:


ராப் என்பது ஒரு வகையான வெல்லமாகும். இது உத்தரபிரதேசம் மற்றும் பிற வெல்லம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மிகவும் பொதுவானது. ராப் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 18% இல் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்கிறோம். இது முன்கூட்டியே தொகுக்கப்பட்டு லேபிளிடப்பட்டிருந்தால் அது 5% விதிக்கப்படும்.


பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 18% முதல் பூஜ்யம் வரை கண்டெய்னர்களில் பொருத்தப்பட்ட டிராக்கிங் சாதனங்கள் அல்லது டேட்டா லாகர்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.


முன்னதாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.


பழனிவேல் தியாகராஜன் விளக்கம்:


ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடத்தப்படாததற்கு விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன், "மதுரைக்கு இத்தனை மாநில அமைச்சர்கள், மத்திய துறை செயலாளர்கள் ஆகியோர் வரும் சூழலில் முறையான விருந்தோம்பல் அளிக்க நேரம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை டெல்லியில் நடத்திவிட்டு அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என கேட்டேன். அதை ஏற்று கொண்டு டெல்லியில் நடத்தியுள்ளார்கள்" என்றார்.