சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் இழந்த உத்தவ் தாக்ரே, தனது ஆதரவாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


ஆலோசனை கூட்டம்:


மும்பையில் உள்ள உத்தவ் தாக்ரேவின், மடோஸ்ரீ இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உத்தரவ் தாக்ரே ஆதரவு தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


ஆட்சியை இழந்த உத்தவ் தாக்ரே:


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த  2019 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா கட்சி,  காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. மகாவிகாஷ் அகாடி என்ற பெயரிலான இந்த கூட்டணியில் 169 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக செயல்பட்டார். இதனிடையே,  சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். அதோடு பாஜக உடன் கைகோர்த்து உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். பாஜகவின் முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.


 கட்சியை இழந்த உத்தவ் தாக்ரே:


இதனிடையே,  உண்மையான சிவசேனா நாங்கள் தான் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதனால் அந்த கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் முடிவில், உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.


உத்தவ் தாக்ரே தரப்பு காட்டம்:


தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவிற்கு உத்தவ் தாக்ரே தரப்பு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்ரே ஆதரவாளரான ஆனந்த் துபே, ‛‛நாங்கள் சந்தேகப்பட்டது உண்மையாகிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறி வந்தோம். சிவசேனா தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் இன்னும் எந்த தீர்ப்போ அல்லது இறுதி முடிவோ எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையம் அவசரம் காட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மத்திய பாஜக அரசின் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை காட்டி உள்ளது” என விமர்சித்து இருந்தார்.