ஓடும் பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை போலீசார் கவனத்தில் எடுத்துள்ளனர். சிந்த்வாரா மாவட்டத்தின் நாக்பூர் சாலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


பரவும் சீர்கேடான ட்ரெண்ட்


பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அபாயகரமான மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் செய்து சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பகிர்வது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. இதே பிப்ரவரி மாதம் தொடங்கும்போது ஒரு காதல் ஜோடி இதே போன்ற குற்றத்தை செய்திருந்தனர். அதில் அந்த ஆண் கைது செய்யப்பட்டு இருந்தார். மேலும் ஒரு சில மாதங்களாகவே விருமன் திரைப்படத்தில் வருவது போல காதல் ஜோடிகள் வண்டியில் பயணிப்பது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் இளம் ஜோடி சம்பந்தப்பட்ட ஒரு ஆபத்தான ஸ்டண்ட் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது. 



காதலர் தினத்தன்று நடந்ததா?


இம்லிகேடா அண்டர்பாஸ் அருகே படமாக்கப்பட்ட வீடியோவில், பெட்ரோல் டேங்கில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது ஒரு ஆண் பைக்கை வேகமாக ஓட்டுவதை பார்க்க முடிகிறது. இடையிடையில் அந்த பெண் எழுந்து நின்றும் பயணம் செய்கிறார். இந்த ஸ்டண்ட் காதலர் தினத்தன்று நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது, அதாவது பிப்ரவரி 14 அன்று இன்ஸ்டாகிராம் ரீலுக்காக படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: Tiruvannamalai ATM Theft: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை; தீரன் பட பாணியில் கொள்ளைக் குழு தலைவன் கைது


சட்டத்திற்கு புறம்பான செயல்


ஆண் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில், பெண் அணியவில்லை என்பதும் விடியோவில் தெரிகிறது. இந்தச் செயல் போக்குவரத்து விதிகளை மீறிய செயல் என்பதும், பைக் சிறிது சீர்குலைந்திருந்தாலும் அவர்களுக்கும் சாலையில் செல்லும் பிற பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.






போக்குவரத்து டிஎஸ்பி உறுதி


வீடியோவில் உள்ள நபர்களின் அடையாளங்கள் தற்போது தெரியவில்லை. இந்த வீடியோவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும், குற்றவாளிகள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் சுதேஷ் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.


போக்குவரத்து டிஎஸ்பி சுதேஷ் சிங் கூறுகையில், "இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இது பிப்ரவரி 14 அன்று படமாக்கப்பட்டிருக்கலாம். இது நிச்சயமாக போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தானது. இளைஞர்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.