ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தவுடன் ஒவ்வொரு பொருளாதார காலாண்டிலும் ஒரு முறையாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம். எனினும் கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறவில்லை. இந்தச் சூழலில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டு அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இது என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இன்றைய கூட்டத்திற்கு முன்பாக தமிழ்நாடு, ராஜஸ்தான்,பஞ்சாப்,கேரளா,மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் நிதியமைச்சர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி கொரோனா நோய் தடுப்பிற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி, மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பூசி, மருந்து மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டி ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். ஏனென்றால், அதை குறைத்தால் அதை தயாரிப்பவர்களுக்கு மூலப்பொருள்டகளுக்கு இருக்கும் வரியை திரும்ப பெறுவது கடினம். அதற்காக இந்த பொருட்களின் விலையை அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் மீது அரசு 5 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது அதேபோல ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்த வரியை குறைக்க வேண்டும் என்று சில மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு விரைவில் அளிக்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தச் சூழலில் இன்றைய கூட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜிஎஸ்டி கவுன்சிலை பொருத்தவரை மத்திய நிதியமைச்சர் அதற்கு தலைமை தாங்குகிறார். மாநிலங்களின் நிதியமைச்சர் அல்லது அம்மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். தற்போது இருக்கும் ஜிஎஸ்ட் கவுன்சிலில் 17 மாநில அமைச்சர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். 14 மாநிலங்களில் பாஜக அல்லாத பிற கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அதிகப்படியான கோரிக்கைகளை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.