Indigo Flights Chaos: விமான சேவைகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு இதுவரை 827 கோடி ரூபாயை திருப்பி அளித்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கடுப்பில் மத்திய அரசு:

விமான ஓட்டி உள்ளிட்ட பணியாளர்களுக்கு கூடுதல் ஓய்வு நேரம் உள்ளிட்ட புதிய விதிகளுக்கு இணங்க, கூடுதல் நபர்களை பணியமர்த்த தவறியதால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்கள் விமான நிலையத்தில் குவிந்தாலும், கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இண்டிகோ நிறுவனம் இதனை திட்டமிட்டே செய்ததாக ஒருபுறமும், எதிர்பாராமல் நடந்த குழப்பம் என்று மறுபுறமும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் மீது மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மத்திய அமைச்சர் எச்சரிக்கை:

இண்டிகோ விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இண்டிகோ நிறுவனம் அதன் உள் செயல்பாடுகளை நிர்வகிக்கத் தவறியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு குழப்பம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கும்போது, ​​அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என பேசியுள்ளார். தொடர்ந்து, ”விமான விபத்துகளுக்குப் பங்களிக்கும் சோர்வைக் குறைக்க விமானிகளுக்கு நீண்ட ஓய்வு நேரத்தை கட்டாயமாக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை விமான நிறுவனம் நன்கு அறிந்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசினார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்ததோடு, இண்டிகோ விவகாரத்தை மத்திய அரசு திறம்பட கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

முடியாத குழப்பம்...

தற்போதைய சூழலானது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவிற்குள் கட்டமைப்பு அழுத்தங்களை வெளிப்படுத்தியுள்ளது. இது தினசரி சுமார் 2,200 விமான சேவைகளை வழங்குகிறது. விரைவான விமானப் போக்குவரத்து நேரங்கள் மற்றும் குறைந்தபட்ச இயக்க நேரங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதன் நீண்டகால செயல்பாட்டு மாதிரி , பாதுகாப்பு விதிகள் அமலுக்கு வந்ததால் சிக்கலாகியுள்ளது. விமான நிறுவனங்கள் அதிக விமானிகளை பணியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் நாடு முழுவதும் திருமணங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் தொழில்முறை பயணத் திட்டங்கள் தடம் புரண்டன என்றும் கடும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதேநேரம், பயணிகளுக்கான பாதிப்பு அதிகரித்ததால், நடவடிக்கைகளை உறுதிப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதிய விதிமுறைகளை தற்காலிகமாக தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

ரூ.827 கோடி கொடுத்தாச்சு..

நவம்பர் 21 முதல் டிசம்பர் 7 வரை விமான நிறுவனத்தின் பெருமளவிலான விமான சேவை ரத்துகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் ரூ.827 கோடியை திருப்பி அளித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் விமான சேவை முடங்கியதால்,  5.8 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.  9,000 தொலைந்து போன பைகளில் 4,500 பைகளை உரிமையாளர்களிடம் இண்டிகோ திருப்பி அளித்துள்ளதாகவும், மீதமுள்ளவை 36 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சகம்தெரிவித்துள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக இண்டிகோ நம்புகிறது, இருப்பினும் அதன் நெட்வொர்க் முழுவதும் தாமதங்களும் ரத்துசெய்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. திங்கட்கிழமை மட்டும் 500 சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.