பாஜக அரசு என்னை இடைநீக்கம் செய்து, நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வெளியேற்றப் பார்க்கிறது. ஆனால் அவர்களால் என் தலைமுடியைக் கூடத் தொட முடியாது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். 


பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.


நவம்பர் 2ஆம் தேதி ஆஜர்


இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து நடந்த நெறிமுறைகள் குழு கூட்டத்தில், நிஷிகாந்த் துபேவும் மொய்த்ராவின் முன்னாள் காதலரான ஆனந்த் தேஹாத்ராயும் வாக்குமூலம் அளித்தனர். தன் தரப்பு நியாயத்தை விளக்க வரும் 31ஆம் தேதி ஆஜராகி நெறிமுகளை குழு கூட்டத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மொய்த்ரா சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனது தொகுதியில் தனக்கு வேலை இருப்பதாக கூறி அவர் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில், நவம்பர் 2ஆம் தேதி ஆஜராகும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களின் போன்களை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சித்ததாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினர். இதில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவும் குற்றச்சாட்டுகளைக் கூறி இருந்தார். 


இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ’’அடுத்தவர்களை ரகசியமாக எட்டிப் பார்ப்பதில் அவர்களுக்கு வரலாறே இருக்கிறது. 2021-ல் இஸ்ரேலில் அவர்கள் வாங்கிய பெகாசஸ் உளவு செயலி மூலம் பிறரை வேவு பார்த்தனர். அது நீதிமன்றத்துக்குச் சென்றும் எதுவும் நடக்கவில்லை. இது இரண்டாவது முறை. 2024 தேர்தல் வரும் சூழலில், முக்கியப் பிரச்சினைகளில் இருந்து நம்மை திசை திருப்ப அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். 


இங்கு என்ன நடக்கிறது?


எங்களுக்கு (எம்.பி.க்களுக்கு) ஏதேனும் நடந்தால், நாடாளுமன்ற சபாநாயகர் சு மோட்டோ நடவடிக்கை எடுக்க வேண்டும். முதன்மைக் குழுவை உடனடியாக அழைக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது? நாடாளுமன்ற கேள்விகளுக்கான லாகின் குறித்துப் பெசிக் கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் மோசமானது. 2ஆம் தேதி எல்லா பொய்களையும் எதிர்கொள்வேன்.  பாஜக அரசு என்னை இடைநீக்கம் செய்து, நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வெளியேற்றப் பார்க்கிறது. ஆனால் அவர்களால் என் தலைமுடியைக் கூடத் தொட முடியாது’’ என்று மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.