ஆளுநர்கள் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது எனவும், விதி 200-இன் படி, சட்ட மசோதாக்கள் மீதான முடிவை ஆளுநர்கள் வேகமாக எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முன்னதாக தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் தரவில்லை என்று கூறி, தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தது.


பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருவதுடன், மசோதாக்கள் ஆளுநர்களால் நீண்ட காலம் கிடப்பில் போடப்படுவது தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.


அந்த வகையில் தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை - முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ்  இடையே மோதல் முற்றி, அரசு தரப்பில் முன்னதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (ஏப்.24) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.


இதில் தெலங்கானா ஆளுநர் சார்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் மாநில அரசு சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவும்  ஆஜராகி வாதாடினர். அப்போது மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மசோதாக்கள் ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அரசியல் சாசனப் பிரிவு 200இன் படி ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது எனச் சொல்வதாகவும் கூறி வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்நிலையில், ஆளுநர்கள் சட்ட விதி 200ஐ மனதில் கொண்டு, உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், சட்ட மசோதாக்கள் மீதான முடிவை ஆளுநர்கள் முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது


மேலும் மசோதாக்களை ஒப்புதல் இல்லாவிட்டால் கிடப்பில் போடாமல் கூடுதல் கருத்துக்களுக்காக விரைந்து குறிப்புடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


சட்ட மசோதாக்கள் மீதான முடிவுகளை ஆளுநர்கள் முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, 4 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.


இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தார்.


இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.