நாடு முழுவதும் 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


நாடாளுமன்ற மாநிலங்களவையில் இலவச சிலிண்டர் இணைப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி பதில் அளித்துள்ளார்.


10 கோடி இலவச சிலிண்டர் இணைப்புகள்:



நாடு முழுவதும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு, மே மாதத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் கீழ், 8 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


எஞ்சிய மற்ற வீடுகளுக்கும் இணைப்பை அளிக்கும் வகையில் மேலும் 1 கோடி சிலிண்டர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் கட்ட உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது.


மத்திய அரசு தகவல்:


இதற்கான இலக்கு 2022 ஜனவரி மாதத்தில் எட்டப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேலும் 60 லட்சம் இணைப்புகளை வழங்க அரசு முடிவு செய்தது. கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டத்தின் 1.60 கோடி இணைப்புகள் என்ற இலக்கும் நிறைவேற்றப்பட்டது.


 






மேலும் இந்தத் திட்டத்தின் கீழ், கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இது, 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


இத்தகவலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது அளித்த பதிலில் கூறினார்.