பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்திற்கு சொந்தமான 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகள் மீது புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது. ரயில்வே துறை டெண்டருக்கு 3 ஏக்கர் நிலம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தநிலையில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு, லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 2004 முதல் 2009 வரை ஆட்சேர்ப்பு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தவழக்கில், லாலு பிரசாத் யாதவ் தவிர அவரது மனைவி, பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகளும், ராஜ்யசபா எம்பியுமான மிசா பார்தி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
139 கோடி டொராண்டா கருவூல ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, 73 வயதான லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியேறினார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து, 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கருவூல ஊழல் வழக்கு, லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஐந்தாவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஆகும்.அதேபோல், லாலுவின் மனைவியும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான ரப்ரி தேவியின் பாட்னா இல்லத்தில் இன்று காலை நடந்த சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்